டெல்லியில் வைகோ திராவிடத்தின் குரல்!

வைகோ
வைகோ
Published on

2004ஆம் ஆண்டு பாஜக அணியில் இருந்து விலகியிருந்த மதிமுக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டது. அந்த சமயத்தில் பொடா சட்டத்தில் சிறையில் இருந்து வைகோ வெளிவந்திருந்தார். அவர் அந்த தேர்தலில் போட்டியிடவில்லை.  சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை சிவகாசியில் நிறுத்தி வெற்றிபெறச் செய்து டெல்லிக்கு அனுப்பினார். அதன் பின்னர் அவர் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவே இல்லை.

பதினைந்து ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்திலும் 24 ஆண்டுகள் கழித்து மாநிலங்களவை உறுப்பினராகவும் வைகோ மீண்டும் நுழைகின்றார்.  1978 -ல் இருந்து அவருடைய நீண்ட நாடாளுமன்றச் செயல்பாடுகளைக் கண்டிருப்பவர்களுக்கு வைகோவின் இந்த நுழைவு எவ்வளவு முக்கியமானது என்று தெரியும். அவரது செயல்பாடுகளைச் சுருக்கமாக இங்கே அடுக்கலாம். அவருடைய உரைகளில் இந்தி எதிர்ப்பு, சுயாட்சி கொள்கை, ஈழத்தமிழர் ஆதரவு, காவிரிப் பிரச்னை, சேது சமுத்திரத்திட்டம் போன்றவை அதிகம் இடம்பெற்றிருக்கும். உலக வரலாற்றின் புரட்சியாளர்களைக் குறிப்பிடாமல் இருக்கமாட்டார். இந்திரா, ராஜிவ், நரசிம்மராவ், வாஜ்பாய் போன்ற பிரதமர்களிடம் எல்லா பிரச்னைகள் குறித்தும் ஆவேசமாக வாதிட்டிருக்கிறார்.  தமிழ்நாட்டுப் பிரச்னை மட்டுமல்லாமல் பிற தேசிய, உலகப் பிரச்னைகள் பற்றியெல்லாம் கூட அவர் வாதிட்டுப் பதிவு செய்திருக்கிறார். இலங்கை இறுதிப்போர் (2009) சமயத்தில் அவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாமல் போனது வருந்தற்குரிய விஷயமே என்பது ஈழ ஆதரவாளர்களின் கருத்து.

1) மாநிலங்களவையில் முதன்முதலாக திமுக
 சார்பில் சார்பில் வைகோ(அப்போது வை.கோபால்சாமி) 1978&ல் உறுப்பினர் ஆக்கப்பட்டார்.  அந்த ஆண்டு மே 2 -ஆம் தேதி நிகழ்த்திய தன் கன்னிப்பேச்சிலேயே இந்தியைத்தான் எதிர்த்தார்.
 ''இந்தி மொழியை நீங்கள் திணித்தால் தூங்குகின்ற வேங்கைப் புலியை உசுப்பிவிடும் பேராபத்தைச் சந்திப்பீர்கள் என எச்சரிக்கிறேன்'' என்றார்.

2) வைகோ எம்.பி. ஆனபோது பிரதராக இருந்தவர் ஜனதா கட்சி சார்பில் மொரார்ஜி
தேசாய். வைகோவுக்கு  மத்திய ரயில்வே அமைச்சகம் அனுப்பிய கடிதம் இந்தியில் இருந்தது. பிரதமர் மொரார்ஜி மாநிலங்களவையில் இருந்தபோது இந்த பிரச்னையை அவர் முன் கிளப்பினார் வைகோ. ''இந்த கடிதத்தின் உறையில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. என்ன உள்ளது என்றே எனக்குப்புரியாது. இந்தி பேசாதமக்களை இரண்டாம்தரக் குடிமக்கள் என்று கருதுகிறீர்களா?'' என்று சீறினார். மொரார்ஜி தேசாய், வைகோ கையில் வைத்திருக்கும் கடிதங்களை தன்னிடம் தருமாறும், அதைக்  கொண்டு காரணமானவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க விரும்புவதாகவும் கூறினார். ஆனால் வைகோ கொடுக்கவில்லை. மாறாக  'கடைசித் தமிழன் இருக்கும்வரையில் நீங்கள் இந்தியைத் திணிக்கமுடியாது' என்று சொல்லி கடிதங்களைக் கிழித்துவீசிவிட்டார்.

3) 1990 - ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் உறுப்பினர்களின் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா, ''ஆங்கிலத்தில் பேசக் கூடாது. இந்தியில்தான் பேசவேண்டும்,'' என்று குரல் எழுப்பினார். வைகோ உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று குரல் எழுப்ப, மாநிலங்களவைத் தலைவரான சங்கர்தயாள் சர்மா,'' திமுக உறுப்பினர் கோபால்சாமி சபையை இந்தியில் நடத்துங்கள் என்று
 சொல்லும்வரை ஆங்கிலத்தில் தான் நடத்துவேன்' என்று அறிவித்தார்.

4)சேதுசமுத்திரத் திட்டம் இன்று பாதியில் அம்போவென நிற்கிறது. இத்திட்டத்துக்காக வைகோ பலமுறை நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். அவர் 1981 -ல் முதன்முதலாக இதுபற்றிக் குரல் எழுப்பினார். 2005 - ல் இதற்கான கால்கோள் விழா மதுரையில் நடக்கும்வரை ஓயாது பேசியும் முயன்றும் வந்திருக்கிறார்.

5)இந்திய தபால் தந்தி சட்டத்தைத் திருத்தவேண்டும் என்கிற தனிநபர் மசோதாவை 1982 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்திருந்தார் வைகோ. இதை விவாதத்துக்கு எடுக்கவிடக்கூடாது என்று மத்திய அரசு குறியாக இருந்தது. இதற்கிடையில் 1983&ல் வைகோவுக்கு வரும் கடிதங்களைத் தணிக்கை செய்யவேண்டும் என்று இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழக ஆளுநர் ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அது ஈழத்தமிழர் படுகொலை நடந்த சமயம். அந்த ஆணை நகலுடன் மாநிலங்களவை சென்ற வைகோ, தமிழக அரசின் மீது உரிமைப் பிரச்னையை எழுப்பி இருந்தார். அவரது பதவிக்காலம் 1984 - ல் முடியும்வரை அந்த மசோதா விவாதத்துக்கு வரவில்லை. மீண்டும் தேர்வான பின்னர் 1986 - ல் அவர் மீண்டும் அந்த மசோதாவைத் தாக்கல் செய்திருந்தார். 1988 - ல் ஒரு நாள் வைகோவின் மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. அன்று முழுக்க வைகோ அவையில் தலைகாட்டவில்லை. எனவே நாடாளுமன்றத்துறை அமைச்சர்
அசட்டையாக இருந்தார். ஆனால் நூலகத்தில் இருந்தவண்ணம் அவை நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்த வைகோ, அன்று முதல் மசோதா விவாதம் முடிந்தபின்னர் உள்ளே திடீரென நுழைந்தார். இரண்டாவதாக வர இருந்த மசோதாவை தாக்கல் செய்திருந்தவரிடம் முன்கூட்டியே
சொல்லி அவையை விட்டு வெளியே சென்றுவிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இப்போது வேறுவழியின்றி அந்த மசோதாவை எடுக்கவேண்டியதாயிற்று.  மக்களுக்கு வரும் கடிதங்களை அரசு, ரகசியமாகப் பிரித்துப் படிக்கும் சட்டத்தைத் திருத்தும் மசோதாவை அன்று விவாதித்தார்கள். அன்று  அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டாலும் அது விவாதத்துக்கு எடுக்கப்பட்டதே வெற்றியாகக் கருதப்பட்டது. 'புலிகளின் கொரில்லா தாக்குதல் போல் வைகோ செயல்பட்டுவிட்டார்,' என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார். வைகோவின் மசோதாவை ஆதரித்து ஏஜி நூரானி, கிருஷ்ணய்யர் போன்ற
சட்டவல்லுனர்கள் பத்திரிகைகளில் கட்டுரைகளும் எழுதினர்.

வைகோ
வைகோ

6) 1985 - ல்  அமெரிக்காவில் நடந்த இந்தியத் திருவிழாவில், தமிழகக் கோவில்களில் இருக்கும் கலைச்செல்வங்களை காட்சிப்பொருளாக எடுத்துச்செல்ல முயற்சி நடந்தது. அதைச் சுட்டிக் காட்டி, அவற்றை எடுத்துச் செல்ல வைகோ எதிர்ப்புத் தெரிவித்தார்.'நான் பகுத்தறிவாளன். எனக்கு சமய நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த கலைப்படைப்புகள் மீது பற்று உண்டு' என்று அவர் உரையில் குறிப்பிட்டார். அந்த முயற்சி கைவிடப்பட்டது.

7) ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது 1991&ல் அமெரிக்க விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பப்பட்டது. கடும் எதிர்ப்புக்குப் பின் அது கைவிடப்பட்டது. சந்திரசேகர் பிரதமர் அப்போது. ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. '' காங்கிரஸுக்குத் தெரியாமல் இது நடக்கவில்லை. இப்போது தவறு என்று சொல்லும் ராஜிவ் கடந்த 30 நாட்களும் ஏன் வாயைத் திறக்கவில்லை?'' என்று கேள்வி கேட்டார் வைகோ. காங் உறுப்பினர் ரத்னாகர் பாண்டே' ராஜீவ் காந்தியை குற்றம்  சாட்டாதீர்கள்'' என்று சொல்ல,'' ஏன் முதல் 30 நாட்கள் ராஜிவ் வாயைத்திறக்கவில்லை? கோமாவில் இருந்தாரா?'' என்று கடுமையாகக் கேட்டார் வைகோ. அத்துடன்,
' சந்திரசேகர் ஒரு குவிஸ்லிங் அரசு; ராஜீவின் கைக்கூலி சர்கார். எடுபிடி அரசு' என்று வைகோ சொன்னது இவ்விவாதத்தின் உச்சம்.

8) சேம்பர் லைன் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் ஹிட்லருடன் உடன்படிக்கை செய்துகொண்ட இங்கிலாந்து பிரதமர். பாபர் மசூதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதற்குப் பின் நடந்த விவாதத்தில் பிரதமர் நரசிம்மராவை இந்தியாவின் சேம்பர்லைன் என்று அழைத்தார் வைகோ. 'இருவருக்கும் ஒரே ஒரு வேறுபாடு, அந்த சேம்பர்லைன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகினார். நமது பிரதமர் பதவியை விடவே மாட்டேன் என்று அறிக்கை விடுகிறார்,'' என்றார் வைகோ.

9)ராஜிவ் காந்தி 1985 - ல் மாநிலங்களவையில் ஒரு விவாதத்தின்போது கல்கத்தாவை செத்துக்கொண்டிருக்கும் நகரம் என்று சொல்லிவிட்டார். இக்கருத்தை திரும்பப்பெறவேண்டும் என்று கம்யூனிஸ்ட் எம்பிகளுடன் சேர்ந்து வைகோவும் வலியுறுத்த ராஜிவ் மெல்ல அவையைவிட்டு வெளியேற எழுந்தார். வைகோ பலத்தகுரலில் பிரதமரே ஓடாதீர்கள்! எங்களுக்குப் பதில் சொல்லாமல் எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்க, ராஜிவ் திரும்பவும் இருக்கைக்குவந்து மக்கள் அவையில் எனக்கு முக்கிய வேலை இருக்கிறது என்று விளக்கம் அளிக்கவேண்டியதாயிற்று. 1987&ல் குடியரசு விழாவில் கலந்துகொண்டசுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதாபோஸ் அவர்களிடம் நீங்கள் போஸின் பேத்தியா என்று ராஜிவ் கேட்டதைக் கண்டித்தும் வைகோ மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். இலங்கைப் பிரச்னை, போபர்ஸ் என்று எல்லாவற்றிலும் ராஜிவின் நிலைப்பாட்டை மிகக்கடுமையாக வைகோ விமர்சனம் செய்திருக்கிறார்.

10)1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கேள்விநேரம் முடிந்ததும் ஒரு சிறப்புத்தீர்மானம் கொண்டுவந்தார் வைகோ. அது மறுநாள் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மத்திய அரசின் விடுமுறை தினமாக அறிவிக்கவேண்டும் என்பது. பிரதமர் விபி சிங் இந்த தீர்மானத்தின்போது அவையில் இருந்தார். அதைப் பரிசீலிப்பதாக அறிவித்தார். ஆனாலும் அன்று மதியமே பிரதமர் அலுவலகத்துக்கு வைகோவும் மேலும் இரு எம்பிகளும் விரைந்து சென்று துண்டுச்சீட்டின் மூலம் இதுபற்றி நினைவூட்டினார்கள். அன்று மதியமே 2.30 மணிக்கு மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை  இணை அமைச்சர் சத்யபால் மாலிக் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார். வைகோ, இதில் காட்டிய வேகத்தைக் கண்டு அனைத்து உறுப்பினர்களும் வியந்தனர்.

11)1980 - ல் பிரணாப் முகர்ஜி, மூப்பனார் போன்ற காங்கிரஸ்காரர்களே பாராட்டிய உரை ஒன்றை வைகோ ஆற்றினார். ''மொரார்ஜி
தேசாய் இந்திய பிரதமராக இருந்தபோது அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. அவரது உயிரை இந்திய விமானப்படை வீரர்கள் ஐவர் தம் உயிரை ஈந்து காப்பாற்றினர். அவர் தான் உயிர் பிழைத்ததைக் கொண்டாடினார். அதே சமயம் அந்த ஐவரின் உடல்கள் சிதையேறிக்
கொண்டிருந்தன. ஆனால் தன் மகன் சஞ்சய் காந்தி விமான

விபத்தில் இறந்தபோது இந்திராகாந்தி சஞ்சயின் உடலைப் பார்க்க முதலில் செல்லாமல் வேறொரு வீட்டுக்குச்
சென்றார். அது தன் மகனுடன் விபத்தில் பலியான இன்னொரு விமானியின் வீட்டுக்கு. அவரது மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தன் மகனின் உடலைப்பார்க்கச் சென்றார்'' என்பது இதன் சுருக்கம்.

12) ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் கறுப்பு ஜூலை எனப்படும் 1983 ஜூலை மாதப்படுகொலைகளைப் பற்றி மாநிலங்களவையில் வைகோ ஆற்றிய உரை மிக முக்கியமானது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் முன்பாக அவர்
சாகும் வரை உண்ணாவிரதம் என்று தொடங்கினார். உடன் எல்.கணேசனும் பங்கேற்றார். மூன்று நாட்களைக் கடந்த போராட்டம், பரூக் அப்துல்லா அவர்களால் முடித்து வைக்கப்பட்டடது. இதைத்தொடர்ந்து பல முறை ஈழப்பிரச்னையை அவையில் எழுப்பினார். அவர் கொண்டுவந்த கவன ஈர்ப்புத்தீர்மானத்துக்கு இந்திரா காந்தி பதிலளிக்கையில்,'' நான் இவரது துயரத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதியில் தமிழர்கள்தான் பூர்வ குடிகள்'' என்றார். இதைத்தொடர்ந்து இந்திராவைச் சந்தித்து வைகோ நன்றி தெரிவித்துக்கொண்டார். ஆனால் அடுத்த இரு மாதங்களிலேயே இந்திரா படுகொலை துயரம் நேர்ந்துவிட்டது.

13) 1989 பிப்ரவரியில் வைகோ படகுமூலம் ஈழத்துக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். அங்கே பிரபாகரனை சந்தித்தார். ஒரு மாதம் கழித்து சென்றதுபோலவே திரும்பினார். அவரது பயணம் பல அரசியல் அலைகளை ஏற்படுத்தி இருந்தது.  அதன் பின்னர் 1989 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நுழைந்தபோது அவருக்கு பிற உறுப்பினர்கள் வரவேற்பை நல்கினர். ''உங்களுக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று நாங்கள் கவலைப்பட்டோம்'' என்றார் மாநிலங்களவைத் துணைத்தலைவர் நஜ்மா ஹெப்துல்லா. அதன் பின்னர் கிடைத்த சந்தர்ப்பங்களில் பேசுகையில் போர் நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என்று வலியுறுத்தினார் வைகோ.

14) 2 -7 -2000த்தில் மதிமுக மாநில மாநாடு ஈரோட்டில்  நடந்தது. அதில் அத்வானி கலந்துகொண்டார்.
'' நானும் பிரதமர் வாஜ்பாயியும் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வைகோவை வலியுறுத்தினோம். ஆனால் அவர் ஏற்கவில்லை. இதுபோன்ற அரசியல்வாதியைப் பார்ப்பது அரிது,'' என்று அத்வானி உரையில் குறிப்பிட்டார்.

15) அது 1999 ல் நடந்த சம்பவம். அச்சயம் டெல்லியில் மாணவனாக இருந்த  நாம் (கட்டுரையாளர்) அங்கே விவசாயத்தில் முதுகலை பயின்றுகொண்டிருந்த சில தமிழ் மாணவர்களுடன் வைகோ அவர்களின் இல்லத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது
அமைச்சரவை உருவாக்கம் நடந்துகொண்டிருந்தது. பிரதமர் வாஜ்பாயியிடம் நீங்கள் விவசாயத்துறையைக் கேட்டுப் பெற்று அமைச்சராகவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் நண்பர்கள். எந்தத் துறை என்பதை பிரதமர்தான் முடிவு செய்வார் என்று நாசுக் காய் பதிலளித்தார் வைகோ. பிறகு தம் கட்சியின் இரு எம்பிகளை இணை அமைச்சர்களாக்கினார்.

16) வைகோவின் சிறைக்குறிப்புகள் நூலை 2005 ல் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுப் பேசுகையில்,'வைகோ தலைவர்களில் ஓர் ஒளிரும்
நட்சத்திரம். என்னை பலமுறை சந்தித்துக் கோரிக்கை வைப்பார். அது பொதுப் பிரச்னைக்காக மட்டுமே. தனிப்பட்ட விஷயங்களுக்காக அல்ல. அவருக்கு வணக்கங்கள்,' என்று குறிப்பிட்டார்.

ஆகஸ்ட், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com